மார்ச் மாதம் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கரோனா நெருக்கடி காரணமாக ரத்துசெய்யப்பட்டது. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தேர்வு நடத்துவதற்காகத் தமிழ்நாடு கல்வித் துறை ஏற்பாடு செய்தது. இதன்படி, ஜூன் 15ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து பள்ளிகளில் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வழங்கும் பணி தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டுவருகின்றன.
இதன் காரணமாக, இன்று காலை அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ மாணவிகளின் கூட்டம் அலைமோதியது. மாணவ, மாணவிகளுக்கு உடல் வெப்ப அளவு பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
தகுந்த இடைவெளியை மறந்து காத்திருந்த மாணவர்கள்! திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கூறியதுபோல பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு நுழைவுச்சீட்டுடன் முகக்கவசங்களும் வழங்கப்பட்டன. ஆனால் நுழைவுச்சீட்டு வாங்கும்பொழுது பெரும்பாலான பள்ளிகளில் தகுந்த இடைவெளி பின்பற்றப்படவில்லை. இது குறித்து அங்கிருந்த ஆசிரியர்களும் மாணவர்களுக்கு அறிவுறுத்தாதது அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற அலட்சியங்கள் ஏன் இவ்வளவு விரைவில் தேர்வை நடத்த வேண்டும் என்ற கேள்வியை எழுப்பாமல் இல்லை.