கரோனா பெருந்தொற்று காரணமாக மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. தற்போது பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கொடைக்கானல் உள்ளிட்ட அனைத்து மலைவாசல் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் இ-பாஸ் பெற வேண்டும்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வந்து செல்ல சுற்றுலாப் பயணிகள் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.
தற்போது தமிழ்நாடு அரசு பேருந்துகள் மூலம் கொடைக்கானல் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. ஆனால் பிற தனியார் வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி கூறியுள்ளார்.
மேலும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை 8,600 இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.