திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, புளியமரத்துக்கோட்டை ஊராட்சி நவாலூத்து கிராமத்தில் சுமார் 150 ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு என்று பிரத்யேகமாக குடிதண்ணீர் தொட்டிகள் கிடையாது. கடந்த 15 நாள்களாக மோட்டார் பழுது என கூறி நவாலூத்து கிராமத்திற்கு நீர் வழங்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் அனைவரும் புளியமரத்துக்கோட்டை ஊராட்சித் தலைவர் தங்கராஜிடம் தண்ணீர் வழங்கக் கேட்டனர்.
அதற்கு அவர், உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு உங்கள் கிராமம் முழுவதும் வாக்களிக்கவில்லை. அதனால் ”யாருக்கு வாக்களித்தீர்களோ அவரிடம் போய் கேளுங்கள் தண்ணீர் வேண்டும் என கேளுங்கள்" என்று அலட்சியமாக பதில் கூறியுள்ளார்.
தற்போது 150 ஆதிதிராவிடர் குடும்பங்களும் தண்ணீருக்காக தோட்டம், காடு என பல இடங்களுக்குச் சென்று தண்ணீருக்கு அலைந்து கொண்டிருக்கின்றனர். அதே சமயத்தில் 7 குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் 36000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் மேல்நிலைத் தொட்டி உள்ளது. ஆனால் 150 பேர் வசிக்கும் பகுதிக்கு ஒரு சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகூட இல்லையென பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.