திண்டுக்கல்: தெய்வசிகாமணிபுரத்தில் உள்ள சி.ஐ.டி.யூ அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், "நேற்று தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடி, தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் எனப் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இரண்டு ஆண்டிற்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது. ஆனால், கட்டடப் பணிகளுக்கு இன்றளவும் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை.
பாரதிய ஜனதா கட்சி தென் மாவட்டங்களுக்கு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் இன்றளவும் அறிவிப்புகளாக மட்டுமே உள்ளன. தென்மாவட்டங்கள் அனைத்துத் துறைகளிலும் பின்தங்கி உள்ளது. இங்குள்ள இளைஞர்கள் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் போன்ற ஊர்களுக்கு வேலைவாய்ப்பிற்காகச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், வேலைவாய்ப்பிற்காகவும் சேது கால்வாய்த் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், இதனை பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தடுத்துவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று மோடி கூறிவருகிறார். ஆனால், அரவக்குறிச்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பொதுமேடையில் திமுக கூட்டணி வேட்பாளருக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.