கரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் தனது ஆதிக்கத்தை அழுந்தப் பதித்துவரும் நிலையில், சில பகுதிகளில் மட்டும் அதனால் நுழையமுடியவில்லை. திண்டுக்கல் மாவட்டம் கரோனா பாதிப்பில், 7ஆம் இடத்தைப் பிடித்து, 80 பேருக்கு கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஆனால், மலைகளின் அரசியான கொடைக்கானல், கரோனாவுக்கு எதிராகச் சிறப்பாகப் போராடி தனித்துநிற்கிறது.
சர்வதேச சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கூடுதல் கவனம் எடுத்து, மாவட்ட நிர்வாகம் அன்றாட நிலவரத்தைத் தினமும் கேட்டு அலுவலர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று துரிதமாகச்செயல்படுத்தியது. அரசுக்குப் பொதுமக்கள் கொடுத்த ஒத்துழைப்பு, தற்சார்பு வாழ்க்கை முறை காரணமாகக் கரோனா இல்லாத பகுதியாகக் கொடைக்கானல் திகழ்கிறது.
மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், உள்ளூர்வாசிகளைப் போலவே, வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர் நடமாட்டம் அதிகம் காணப்படும். கரோனா குறித்த பரபரப்பு உருவான மார்ச் மாதமே, நடவடிக்கையில் இறங்கியது மாவட்ட நிர்வாகம்.
கொடைக்கானலில் இருக்கும் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் உடனடியாக மூடியது. வெளியாள்கள், வெளிநாட்டுப் பயணிகள் நகருக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப்பட்டது. அதேபோல கொடைக்கானலில் தங்கியிருந்த வெளிநாட்டினரையும் உடனடியாக வெளியேற்றியது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு ஊருக்குத் திரும்பிய உள்ளூர்வாசிகள், சுமார் 1,200 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டார்கள்.
இதனால் கரோனா பரவல் தவிர்க்கப்பட்டது. குறிப்பாக, கொடைக்கானல் எல்லைப் பகுதிகளில் தொடர் சோதனை, கண்காணிப்பு நடைபெற்றது. கரோனா தொற்று பரவிய நாள் முதல் நகராட்சி நிர்வாகம், சுகாதாரத் துறையின் துரித நடவடிக்கை, பெருந்தொற்று யாருக்கும் இல்லை என்பதை உறுதிசெய்தது.
அரசு அலுவலர்கள், பொதுமக்கள், சுற்றுச்சூழல், வாழ்வியல் முறைகள் என அனைவரும் ஒருங்கிணைந்து, கரோனாவைத் தடுக்க உதவியுள்ளனர்.