தருமபுரி அருகே இலக்கியம்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் காலை முதல் பொதுமக்கள், நீண்ட வரிசையில் நின்றபடியே தங்களுடையை வாக்கினை பதிவு செய்தனர். இந்நிலையில் வாக்களிக்க வந்த இளைஞர் ஒருவர், தனக்கு ஓட்டுப் போட பிடிக்கவில்லை என கூறி திடீரென தலையில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார்.
தருமபுரி வாக்குச்சாவடியில் தீக்குளிக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு
தருமபுரி: வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த இளைஞர், திடீரென உடல் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர், இளைஞரை தடுத்து கையில் இருந்த பெட்ரோல் கேனை பறித்தும், அவர் மீது தண்ணீரை ஊற்றியும் காப்பாற்றினர். இந்த தீக்குளிப்பு முயற்சி சம்பவத்தால் வாக்குச்சாவடி நுழைவாயிலில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பின்னர், அந்த இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
எனக்கு ஓட்டுப் போடவே பிடிக்கவில்லை. தனக்கு பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. நான் சென்னையில் சமையல் கலைஞராக பணிபுரிகிறேன். நான் நல்லவன் என்பதை எங்களது உரிமையாளர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகதான் செய்தேன் என சம்பந்தம் இல்லாமல் முன்னுக்குப்பின் முரணாக தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். உடனடியாக காவல்துறையினர் அந்த இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விசாரணையில், அவர் மொரப்பூர் பகுதி எலவடை கிராமத்தைச் சார்ந்த நவமணி என்பவரின் மகன் சீனு(28) என தெரியவந்தது.