தருமபுரி:நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு தற்போது தாக்கல் செய்துள்ள அரசியல் அமைப்பு மசோதா தொடர்பாக பேசிய தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவா் டி.என்.வி.செந்தில் குமார் இந்த மசோதாவில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் என்ற வகுப்பை சார்ந்தவர்களையும் இணைத்ததற்கு நன்றி என கூறினார்.
பல ஆண்டுகளாக இந்த சமூகத்தை சார்ந்தவர்கள் தங்களது இட ஒதுக்கீடுகளுக்காக போராடி வருகின்றனர். இது தொடர்பாக லோக்கூர் கமிட்டி அமைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, கடந்த 50 ஆண்டுகளாக அதாவது இரண்டு தலைமுறைகளாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெற இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் போராடி வருகிறார்கள்.
மேலும் இந்த சமூகத்தில் படித்த இளைஞர்கள் இட ஒதுக்கீடு கிடைக்காத காரணத்தினால் கோவில்கள் மற்றும் சாலைகளில் ஆபரணங்கள் விற்று வாழ்ந்து வருகின்றனர். தற்பொழுது இவர்களது தொழிலான வேட்டையாடுவதையும் தடை செய்து விட்டதால் காடுகளில் பீடி தொழிலுக்கு பயன்படும் டெண்டர் இலைகளை சேகரித்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இந்த ஒன்றிய அரசு அதற்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இதற்கு மாறாக பீடி தொழில் செய்யும் தொழில் அதிபர்களுக்கு இந்த வரியை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.