தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பத்திர அள்ளி ஊராட்சிக்குட்பட்ட பூச்சூர் பகுதியில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 140க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்றுவருகின்றனர். ஏழு ஆசிரியர்கள் இப்பள்ளியில் பணியாற்றிவருகின்றனர். இப்பள்ளியின் தலைமையாசிரியராக சுப்பிரமணி என்பவர் இருக்கிறார்.
இந்நிலையில், தலைமையாசிரியர் சுப்பிரமணி பள்ளியில் படிக்கும் மாணவிகளை தனி அறைக்கு அழைத்து பாலியல் சீண்டல்கள் செய்ததாக பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் புகார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை எச்சரித்தும், அதனை கண்டுகொள்ளாமல் சுப்பிரமணி இன்று பள்ளி மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். உடனே அழுதுகொண்டே வீட்டுக்குச் சென்று பள்ளியில் நடந்தவற்றை தன் பெற்றோரிடம் கூறி அம்மாணவி அழுதுள்ளார்.
சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளி முற்றுகை இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியல் செய்தனர். இதையடுத்து ஏரியூர் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கர் பாபு, பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் லதா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களிடம் விசாரித்து பள்ளி தலைமையாசிரியர் சுப்பிரமணியை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர் சந்திப்பில், பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அவர் பேட்டியளித்த அடுத்த நாளே இச்சம்பவம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.