நாடெங்கிலும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் கரோனா தொற்று இல்லா மாவட்டமாக இருக்கிறது.
வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர் இந்நிலையில், பொதுமக்கள் தடையை மீறி சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் வெளியே சுற்றி வருகின்றனர். இரு சக்கர வாகனங்களிலும் அதிக அளவில் சுற்றித் திரிகின்றனர். இதனைத் தடுக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் எஸ். மலர்விழி தருமபுரி நகரப்பகுதியில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளையும் இறைச்சி, மீன் கடைகளையும் மறுஉத்தரவு வரும் வரை மூட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.
அதன்படி கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தருமபுரி செந்தில் நகரில் இயங்கிவந்த தனியார் பெட்ரோல் பங்க்கில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவையும் மீறி பெட்ரோல் விற்பனை செய்யபட்டது. அதேபோல், தருமபுரி பேருந்து நிலையம் அருகே உள்ள ஃபுட் கார்னரிலும் அசைவ உணவுகள் விற்கப்பட்டுள்ளன.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லாகான், கோட்டாட்சியர் தேன்மொழி, தருமபுரி தாசில்தார் சுகுமார் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள், தடையை மீறி செயல்பட்ட கடை, பெட்ரோல் பங்க் ஆகியவற்றுக்குச் சீல் வைத்தனர்.
இதையும் படிங்க: கேரளாவில் பாதியாக குறைந்த குற்றங்கள்