தமிழ்நாடு

tamil nadu

’சிறுபான்மையின மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’

தருமபுரி: சிறுபான்மையின மக்கள் வாழ்வாதாரம் மேம்பட மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டுமென மாநில சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.

By

Published : Sep 29, 2020, 9:02 AM IST

Published : Sep 29, 2020, 9:02 AM IST

சிறுபான்மையின மக்கள் நல கூட்டம்
சிறுபான்மையின மக்கள் நல கூட்டம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாநில சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் ஜான் மகேந்திரன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, உறுப்பினர் செயலர் சுரேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் ரூ.32.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்கள் 189 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

கூட்டத்தில், ஜான் மகேந்திரன் பேசுகையில், "தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலன் காக்கும் வகையில், அரசு ஆசிரியர்களின் ஓய்வூதியத்தை ரூ.1, 500லிருந்து ரூ.3, 000-ஆக உயர்த்தி உள்ளது.

உலமாக்கள், பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஹஜ், ஜெருசலேம் உள்ளிட்ட புனித பயணம் மேற்கொள்ள நலத்திட்ட உதவிகள் வழங்குதல், தேவாலயம், மசூதி புனித தளங்களை சீரமைக்க நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் வாழும் மதம், மொழி வாரியான சிறுபான்மையினரின் நலன்களை பேணிக்காக்கவும், அவர்கள் உரிமைகளை பாதுகாக்கவும் 1989ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையம் அமைக்கப்பட்டது.

சிறுபான்மையினருக்கு பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு ஆகியவற்றுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. கிராம பகுதிகளில் 50 விழுக்காடு அளவிலும், நகர பகுதிகளில் 25 விழுக்காடு அளவிலும் சிறுபான்மையினர் வசித்தால் அப்பகுதியில் குடிநீர், குடியிருப்பு, சாலை, கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட அரசு சார்பில் நிதி வழங்கப்படுகிறது.

சிறுபான்மையினர் வாழ்வாதாரம் மேம்பட டாம்கோ நிறுவனம் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது. சிறுபான்மையினர் வாழ்வாதாரம் மேம்பட மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

எனவே, இது தொடர்பான விழிப்புணர்வை சிறுபான்மையின மக்கள் பெற்றிடும் வகையில், சிறுபான்மையின சமுதாய தலைவர்கள் நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும்.

சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகளை சிறுபான்மையினர் ஆணையத்தின் மூலம் தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்திட ஆணையம் எப்போதும் இணைப்புப் பாலமாகவும், துணையாகவும் இருக்கும்" என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில், காவல் கண்காணிப்பாளர் பிரவேஸ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லா கான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நல அலுவலர் அய்யப்பன், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் அசோகன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் நாகலட்சுமி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தீபா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details