தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீணாக கடலில் கலக்கும் நீர் - ஒகேனக்கல் உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற ஜி.கே.மணி கோரிக்கை!

'தர்மபுரியில் 95 டிஎம்சி நீர் வீணாக கடலில் கலந்துவருவதால் உடனடியாக ஒகேனக்கல் உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்' என பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணி கேட்டுக்கொண்டார்.

பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த ஜிகே மணி
பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த ஜிகே மணி

By

Published : Aug 5, 2022, 5:27 PM IST

தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட இடங்களை பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். வெள்ளம் சூழ்ந்த இடங்களையும் வெள்ளத்தால் விவசாய நிலங்களில் நிலக்கடலை செடிகள் மூழ்கிய வயல்களையும் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப்பேரவைத்தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒகேனக்கல் பகுதி கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள் சேதமடைந்து, மிகப்பெரிய பாதிப்பு உருவாகியுள்ளது.

ஒகேனக்கலில் தொடங்கி மேட்டூர், பூம்புகார் வரை மிகப்பெரிய வெள்ள சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஒகேனக்கல் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா தலம். இங்கு வீடுகள் அதிகளவு பாதிக்கப்பட்டு சுற்றுலா முடங்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகளையும் இங்குள்ள மக்களையும் பாதுகாக்க ஒகேனக்கல் படித்துறையில் இருந்து நீரேற்று நிலையம் வரை மிகப்பெரிய தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.

மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகு 20 நாள்களில் 95 டிஎம்சி நீர் வீணாக கடலில் கலந்துள்ளது. நேற்று (ஆக. 04) மட்டும் 16 டிஎம்சி நீர் கடலில் கலந்துள்ளது. கடலுக்கு வீணாக செல்லும் உபரி நீரை ஒகேனக்கல் பகுதியில் இருந்து தர்மபுரி மாவட்டம் முழுவதற்கும் ஏரி, குளங்களை நிரப்புவதற்கான திட்டத்தை அன்புமணி ராமதாஸ் முன்வைத்தார். இதற்காக 10 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கத்தை நடத்தி அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

உபரி நீா் திட்டத்தை நிறைவேற்ற சட்டப்பேரவையிலும் பேசியிருக்கிறேன். முதலமைச்சரிடம் நேரடியாக கோரிக்கை வைத்திருக்கிறேன். அவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். வீணாக கடலில் கலந்த 5 மணி நேர தண்ணீரை மட்டும் தர்மபுரி மாவட்டத்திற்குள் உள்ள ஏரி, குளங்களை நிரப்ப பயன்படுத்தியிருந்தால் போதுமானதாக இருக்கும்.

பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த எம்.எல்.ஏ ஜி.கே. மணி

ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதனால் டெல்டா விவசாயிகளுக்கு எந்தவிதப்பாதிப்பும் இருக்காது. வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:'மின்வாகனங்களுக்கு சார்ஜர் நிலையங்கள் அமைக்க 100 இடங்கள் தேர்வு' - அமைச்சர் செந்தில் பாலாஜி!

ABOUT THE AUTHOR

...view details