தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்திலுள்ள 10 அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 965 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.39.01 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள், 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு பேனாக்களை உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.
இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் எஸ். மலர்விழி தலைமை வகித்தார். இவ்விழாவில் பேசிய அமைச்சர், “இந்தியளவில் உயர் கல்வியில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதற்கு, பல்வேறு சிறப்புத் திட்டங்கள் மூலம் பள்ளிக் கல்வியில் இடைநிற்றலைத் தவிர்த்ததும் முக்கியக் காரணமாகும். மாணவர்கள் பள்ளி இடைநிற்றலைத் தவிர்க்க அரசு 14 வகையான விலையில்லாப் பொருள்களை வழங்கிவருகிறது.
அரசுப் பள்ளிகளில் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுவருகின்றனர். பள்ளிக் கல்வியை முடிக்கும் மாணவர்கள் தகுதியின் அடிப்படையில் உயர் கல்விக்குச் செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். போட்டித் தேர்வுகளில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வெற்றிபெற்றுவருகின்றனர்.