கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் உத்தரவின்படி ஊரடங்கைத் தொடர்ந்து மதுக்கடைகள் அனைத்தும் தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், தருமபுரியில், மது பிரியர்களை இலக்காகக் கொண்டு, சமூக விரோதிகள் சிலர் கிராமப் பகுதிகளில் சட்டவிரோதமாக சாராயம் விற்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவின் பேரில் பாலக்கோடை அடுத்த தண்டுகாரன அள்ளி பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக குடிபோதையில் சென்ற நபரை காவல் துறையினர் பிடித்து விசாரித்ததில், தண்டு காரன அள்ளி பகுதிகளில் சாராயம் ஒரு லிட்டர் 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.
அதன் பேரில் விரைந்து சென்ற பாலக்கோடு பகுதி காவல் துறையினர், தண்டுகாரன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த தேவன் (வயது 24) அதே கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் (வயது 28) ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 10 லிட்டர் கள்ளச்சாராயத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும் 100 லிட்டர் ஊறலையும் கீழே கொட்டி அழித்தனர்.
இதையும் படிங்க:கரோனாவிலிருந்து காவலர்களைக் காக்க யோகா!