தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் பகுதியிலுள்ள சிக்கத்திம்மன அள்ளி ஏரியில் குடிமராமத்து திட்டப்பணிகளைத் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று துவக்கி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது, குடிமராமத்து திட்டத்தின் கீழ் 10 ஏரிகளில் 4 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
காரிமங்கலம் பகுதியிலுள்ள சிக்கத்திம்மன அள்ளி ஏரியில், தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்றைய தினமே மற்ற ஏரிகளிலும் பணிகள் தொடங்கப்படும் என்றார். இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ததற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தருமபுரி மக்கள் சார்பில் நன்றியையும் தெரிவித்தார்.
குடிமராமத்துப் பணிகளை அமைச்சர் கே.பி. அன்பழகன் துவக்கிவைத்தார் வாய்க்காலிலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், ஏரியைத் தூர்வாரி கரையினை பலப்படுத்துதல், ஏரியின் மதகு மற்றும் உபரி நீர் செல்லும் பகுதிகளைப் புதுப்பித்தல் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இவ்விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.கோவிந்தசாமி, வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன்அருள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.