தருமபுரி:ஒகேனக்கல் பரிசல் பயணம் குறித்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “தருமபுரி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பகுதிகளில் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் அடிப்படையில் பரிசல் இயக்க 20,000 கன அடிக்கு குறைவாகத் தண்ணீர் வரும்போது கொத்திகள்பாறை பகுதியில் சமூக இடைவெளியைக் கடைபிடித்து, தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றி சுற்றுலா பயணிகளை அனுமதிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
20 ஆயிரம் கன அடிக்கு குறைவாகத் தண்ணீர் வரப் பெற்றால், நீர்வீழ்ச்சி பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர். சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான விடுதிகளில் தங்கி, மீன் உணவுகளை உட்கொள்ள அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் அரசு அறிவுறுத்தியுள்ளது வழிமுறைகளான, முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், தனிநபர் இடைவெளியைப் பின்பற்றுதல், நீர்வீழ்ச்சி பகுதிக்கு வருதற்கு முன்பே மருத்துவக் குழுவினரால் காய்ச்சல் உள்ளதா என்பது குறித்து பரிசோதனை செய்தல் போன்றவற்றை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுவர்.
சுற்றுலா பயணிகளைக் கண்காணிக்க 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பரிசலில் 3 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க மட்டுமே அனுமதி. ஆற்றுப் பகுதியில் குளிக்க அனுமதி இல்லை. நீர்வரத்து 20 ஆயிரத்துக்கு அதிகமானால் அருவியிலும் குளிக்க அனுமதி இல்லை.
நீர்வரத்து குறித்து ஒவ்வொரு நாளும் அறிவிப்பு வெளியிடப்படும். சிறுவர் பூங்கா, முதலைப் பண்ணை, தொங்கு பாலம் போன்ற பகுதிகளைச் சுற்றி பார்க்க அனுமதி இல்லை. பென்னாகரம் மடம் பகுதியிலேயே சுற்றுலாப் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.