தருமபுரி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குவது ஒகேனக்கல். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பது, ஆயில் மசாஜ், படகு சவாரி செய்வது மட்டுமின்றி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தல், தோஷம் கழித்தல் உள்ளிட்டவைகளை செய்துவருகின்றனர்.
இவ்வாறு திதி, தோஷம் உள்ளிட்ட பூஜையில் பயன்படுத்திய பொருட்களை ஆற்றில் கரைப்பதும் ஆற்றங்கரையோரம் வீசி எறிந்து செல்வதையும் சுற்றுலாப் பயணிகள் வழக்கமாக கொண்டிருந்தனர். இதனால் துணி, பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 25 டன் குப்பைகள் ஆங்காங்கு சிதறிக் கிடக்கின்றன.
இந்நிலையில், ஒகேனக்கல் பகுதியை தூய்மையான பகுதியாக மாற்ற மெகா தூய்மைப் பணி பென்னாகரம் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று தொடங்கியது. இத்தூய்மைப் பணியில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தூய்மை காவலர்கள் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.