தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த நாச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாலினி. இவர் பிரசவத்திற்காக ஜுன் 18ஆம் தேதி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து மாலினிக்கு நேற்று (ஜுன் 19) ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இன்று (ஜுன் 20) காலை 8:30 மணியளவில் இவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக கழிவறைக்கு சென்றிருந்தார்.
அப்போது, குழந்தையிடம் உறவினர்கள் யாரும் இல்லாத நேரம் பார்த்து பிறந்த ஆண் குழந்தையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.
காணாமல் போன பச்சிளம் குழந்தை
மாலினி திரும்பிவந்து பார்த்தபோது குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ந்து போய், அக்கம் பக்கத்தில் பார்த்தும், செவிலியரிடம் கேட்டும் உள்ளார்.
ஆனால், குழந்தை எங்கும் கிடைக்கவில்லை. இதனைத்தொடர்ந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் புகார் தெரிவித்தார்.
குழந்தையைப் பறிகொடுத்த மாலினி கணவருடன் புகார் அளிக்க காத்திருக்கும் காட்சி தொடர்ந்து தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவுசெய்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், தர்மபுரி காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று, பச்சிளங்குழந்தைப் பிரிவில் தீவிர விசாரணை நடத்தினார்.
அந்தப் பெண் யார்?
பின்னர் மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்தார்.
அப்பொழுது பெண் ஒருவர் குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியில் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
தொடர்ந்து அந்தப் பெண் யார்? பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவரா? பெண் எடுத்துச் செல்லும் குழந்தை அவருடையதா? போன்ற பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை திருடுபோனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.