காவல்துறை தடையையும் மீறி பாஜக சார்பில் வள்ளலார் திடலில் இன்று வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் கலந்து கொள்வார் என கூறப்பட்டிருந்த நிலையில் அவர் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, “ தருமபுரி மாவட்டம் அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி அடைய அனைவரும் தாமரை சின்னத்தை ஆதரிக்க வேண்டும். அதியமான் அவ்வையாருக்கு நெல்லிக்கனி வழங்கி தமிழை வளர்த்தது போல, பிரதமர் மோடி அமெரிக்காவிலும் தமிழ் பேசுகிறார், ஐநாவிலும் தமிழ் பேசுகிறார். உலகம் முழுவதும் திருக்குறளை சொல்லி திருவள்ளுவத்தை மக்களிடம் பரப்பி வருகிறார் ” என்றார்.
முன்னதாக பேசிய அவர், தருமபுரி 1972 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவானதாக தெரிவித்தார். ஆனால், தருமபுரி மாவட்டம் 1965 ஆம் ஆண்டே சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிந்தது என்பது மேடையில் இருந்த மற்றவர்களுக்கும் தெரியவில்லை. ஆனால் கீழே நின்றிருந்த தருமபுரி மாவட்ட பாஜக தொண்டர்கள், ஒரு மாவட்டம் பிரிந்தது கூட தெரியவில்லை, என்னத்த சொல்றது என முணுமுணுத்தனர்.