தருமபுரி மாவட்டம் அ.பள்ளிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மூக்காரெட்டிபட்டி, பொ.குறிஞ்சிப்பட்டி ஆகிய இடங்களில் பிரதம மந்திரி சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நேற்று (ஆக.28) சுமார் 8 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் திட்டங்களை பெற்றுத்தரும் மக்களவை உறுப்பினருக்கு தகவல் தெரிவிக்காமல் பணிகள் செயல்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே, சாலையமைக்கும் பணியை ஆய்வு செய்த தருமபுரி எம்.பி. செந்தில்குமார், அ.பள்ளிப்பட்டி அடுத்த சாலூர் பகுதியில் சுமார் 3 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலையமைக்கும் பணி திட்டத்தை மீண்டும் ஒரு முறை பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தருமபுரி மாவட்டத்திற்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசிடம் பரிந்துரை செய்து பெற்றுத் தருகிறேன். ஆனால், இந்த பணிகளை தொடங்கும்போது மக்களவை உறுப்பினருக்கு தெரியப்படுத்துவது இல்லை. இதேபோல் மூக்காரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், பொ.துறிஞ்சிபட்டி ஆகிய இடங்களிலும் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் சாலைப் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு மக்களவை உறுப்பினருக்கு அழைப்பில்லை.
அதேபோன்று பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் உண்ணாமலை குணசேகரன் அழைக்கப்படவில்லை. பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் மலைவாழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். மக்கள் பிரதநிதிகள் திமுக என்பதால் புறக்கணிக்கப்படுகிறார். தருமபுரி மாவட்டத்தில் அரசு விழாக்கள் அனைத்தும் அதிமுகவின் கட்சி நிகழ்ச்சியாகவே நடத்தப்படுகிறது. தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்" என்று குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க:தமிழ் சினிமாவில் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு - ஆர்.கே.செல்வமணி