சென்னை மாநகரத்தின் குடிநீர் பிரச்னையை போக்கும் முக்கிய நீர் ஆதாரமாக கடலூரில் உள்ள வீராணம் ஏரி விளங்குகிறது.
ஆனால், கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்வரத்து வெகுவாகக் குறைந்தது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 15ஆம் தேதி முதல், மேட்டூர் அணையிலிருந்து கீழணைக்கு வரும் நீரை, வீராணம் ஏரிக்கு அனுப்புவது நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமானால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். இதையடுத்து கடந்த மாதம் 31ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து கீழணைக்கு மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனையடுத்து கீழணையிலிருந்து, வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், நீர் மட்டம் கிடுகிடுவென உயரத் தொடங்கி, தற்போது 46.2 அடியாக நீர் இருப்பு உள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு, வீராணம் ஏரி மீண்டும் கோடை காலத்தில் நிரம்பியுள்ளது. இதன்மூலம் சென்னையின் குடிநீர் தேவையை ஜூன் மாதம் வரை சமாளிக்க முடியும் என பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் அருணகிரி தெரிவித்தார்.