தமிழ்நாடு

tamil nadu

'இளவேனில் வாலறிவன்' பெயர் எப்படி வந்தது தெரியுமா?

கடலூர்: சாதனை மங்கை 'இளவேனில் வாலறிவன்' பெயர் காரணம் குறித்து நாம் இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

By

Published : Sep 3, 2019, 11:25 AM IST

Published : Sep 3, 2019, 11:25 AM IST

Updated : Sep 3, 2019, 2:38 PM IST

elavenil-valarivan

பிரேசிலின் ரியோ டி ஜெனரியோ நகரில் நடைபெற்ற உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 'இளவேனில் வாலறிவன்' தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்று சாதனை படைத்துள்ளார். அவரது இந்தச் சாதனையை பாராட்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இதற்கிடையே 'இளவேனில் வாலறிவன்' பெயர் காரணம் குறித்து நமது ஈடிவி பாரத்திடம் பகிர்ந்துகொண்ட அவரது தாத்தா-பாட்டியான வை. உருத்திராபதி-கிருஷ்ணவேணி தம்பதி, "எங்களுக்கு இரண்டு மகன், ஒரு மகள் என மூன்று பிள்ளைகள். முதல் மகனுக்கு 'வாலறிவன்' என்றும், இரண்டாவது மகனுக்கு 'புகழேந்தி' எனவும், மகளுக்கு 'மாலதி' எனவும் பெயர் சூட்டி உள்ளோம். எங்களுக்கு தமிழ் மொழியின் மீதும் திருக்குறளின் மீதும் அதீத ஆர்வம். அதன் அடிப்படையில், "கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்" என்னும் குறளில் இடம்பெற்றுள்ள 'வாலறிவன்' என்ற சொல்லை எனது முதல் மகனுக்கு பெயராக சூட்டினோம்.

இளவேனில் வாலறிவனின் தாத்தா-பாட்டி உருத்திராபதி-கிருஷ்ணவேணி தம்பதி சிறப்பு பேட்டி

இரண்டாவது மகனுக்கு 'அறவாழி அந்தணன்' என பெயர் சூட்ட நினைத்திருந்தோம். ஆனால், எங்களது மூத்த மகன் (வாலறிவன்) இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயத்தில், எனக்கு தம்பி பிறந்தால் 'புகழேந்தி' என பெயர் சூட்ட வேண்டும் என்று எங்களிடம் கேட்டுக்கொண்டான். அதனடிப்படையில், இரண்டாவது மகனுக்கு 'புகழேந்தி' என பெயர் சூட்டினோம். எங்களது மகளுக்கு 'மாதவி' என்று பெயர் வைக்க நினைத்திருந்தோம். ஆனால், எங்களது குடும்ப நண்பர் ஒருவர் தனக்கு மகள் பிறந்தாள் 'மாதவி' என பெயர் சூட்ட இருப்பதாக எங்களிடம் தெரிவித்தார். அதனால் இந்த முடிவை மாற்றிக் கொண்டு எங்களது மகளுக்கு 'மாலதி' என பெயர் சூட்டினோம் என்றனர்.

இளவேனில் வாலறிவன்

இதில் வாலறிவனுக்கு 'இறைவன்' என்ற மகனும், 'இளவேனில்' என்ற மகளும் உள்ளனர். இதில் இறைவனுக்கு "இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புறிந்தா மாட்டின்" என்ற குறளில் இடம்பெற்றுள்ள 'இறைவன்' என்ற சொல்லை வைத்து பெயர் வைத்தோம்.

அதேபோல் இளவேனில் என்ற பெயர்., வசந்தி, வசந்தா போன்ற பெயர்கள் சமஸ்கிருத மொழியை சேர்ந்தவை. அதனால் வசந்தகாலத்தை குறிக்கும் தூய தமிழ் வார்த்தையான 'இளவேனில்' என்பதை எங்களது பேத்திக்கு சூட்டியிருக்கிறோம்" எனத் தெரிவிக்கின்றனர் இந்தச் சாதனை மங்கையின் மூதாதையர்கள்.

இளவேனில் வாலறிவன்

தொடர்ந்து பேசிய அவர்கள், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இளவேனில் தங்கம் வென்றது தங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்றும் அவர் தொடர்ந்து வெற்றிபெற வேண்டும் என விருப்பம் தெரிவிக்கின்றனர். ஒலிம்பிக் போட்டியிலும் இளவேனில் வெற்றிபெற்று இந்த நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே தங்களுக்கு அதீத மகிழ்ச்சியை அளிக்கும் என்றும் கூறினர்.

Last Updated : Sep 3, 2019, 2:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details