கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்துக்குள்பட்ட மேற்கு பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்தவர் ஹேம்குமாரி. இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியையாகக் கடந்த 15 ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறார்.
இப்பகுதியிலுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் அதிகம் படிப்பறிவு இல்லாத நாடோடிகள். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் படித்துவருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் ஹேம்குமாரி வகுப்பறையில் படிக்கும் மாணவர்களைத் தனது பிள்ளைகள்போல் அரவணைத்து, அவர்கள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக படிக்க வேண்டும் என எண்ணினார்.
அதற்காகத் தனது சொந்த செலவில் ஒரு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் போர்டு, நாற்காலி, மேசை உள்ளிட்டவைகளை வாங்கிப்போட்டு கல்வி கற்பித்துக் கொண்டிருக்கிறார்.
இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்கள் தாய்மொழியில்தான் பேசுவார்கள். இதனால் அவர்கள் தமிழ் மொழி கற்க மிகவும் சிரமப்படுவார்கள் என்றெண்ணி காணொலி மூலம் கல்வி கற்பித்தால் அவர்கள் விரைவில் கற்றுக்கொள்வார்கள் என்ற அடிப்படையில் ஸ்மார்ட் போர்டு வாங்கிப் பயிற்றுவித்துவருகிறார் ஹேம்குமாரி.
இதனால் மாணவர்கள் ஆர்வமாகக் கல்வி கற்கின்றனர். அறியாத பல விஷயங்கள் அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
- படிப்பு என்பது மனமும் மனநிலையும் சார்ந்த படிப்பாக இருக்க வேண்டும்,
- எல்லா விஷயங்களையும் அறிந்துகொண்டு படிக்க வேண்டும்,
- படிப்பைத் திணிக்கக் கூடாது - அவர்கள் விருப்பப்பட்டு படிக்க வேண்டும்,
என்ற அடிப்படையில் பயிற்றுவிக்கும் இவர், கல்வியையும் தாண்டி பல விஷயங்களை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். அதன்படி...
- கலை,
- பாடல்கள்,
- பாரம்பரிய விளையாட்டுகள்
உள்ளிட்ட பலவற்றைக் கற்றுக்கொடுக்கும் ஹேம்குமாரி, 'ஆசிரியர் பணியே அறப்பணி; அதற்கே உன்னை அர்ப்பணி' என்ற பொன்மொழிக்கு ஏற்றார்போல் அர்ப்பணிப்போடு பணியாற்றிவருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க:'தவிக்கும் வாய் அறியும் தண்ணீரின் தேவையை...'