என்எல்சி விவகாரத்தில் தமிழ்நாட்டின் அழிவுக்கு பாஜகவுடன் திமுக கூட்டணியில் உள்ளதா என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். கடலூர்:குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு உட்பட்ட சின்னகாட்டுசாகையில் பாமக பிரமுகர் இல்ல விழாவிற்கு, அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை தந்தார். நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், “என்எல்சிக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு எதிராகவும் தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. என்எல்சி நிர்வாகம், கடலூர் மாவட்டத்தில் 66 ஆண்டு காலம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த 66 ஆண்டு காலத்தில் 3 தலைமுறைகளை நாசப்படுத்தி இருக்கிறது. 66 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டிற்கு மின்சாரம் தேவைப்பட்டது. இதற்காக, கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியவர்கள் எல்லாம் மின்சார தேவைக்காக என்எல்சி-க்கு நிலத்தைக் கொடுத்தார்கள். ஆனால், தற்போதைய சூழலில் தமிழ்நாட்டிற்கு என்எல்சி தேவை இல்லாதது.
தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தி 35 ஆயிரம் மெகாவாட் என உள்ளது. அதேநேரம், தமிழ்நாட்டின் மின் தேவை என்பது உச்ச காலங்களில் 18 ஆயிரம் மெகாவாட் வரை இருக்கிறது. இதில் என்எல்சி தரப்பில் 800 முதல் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொடுக்கப்படுகிறது. மின்சாரம் தயாரிப்பதற்கு சூரிய ஒளி உள்பட பல்வேறு மூலங்கள் உள்ளன.
சமீபத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து, தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தொழில் துறை, வேளாண் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் நான் விவசாயிகளின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டேன்.
இன்னும் 7 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைத் தயாரிக்கலாம் என கூறி இருக்கிறார்கள். சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் என்எல்சி தேவையில்லை. 1989ஆம் ஆண்டில் இறுதியாக நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலையை என்எல்சி நிர்வாகம் அளித்துள்ளது.
என்எல்சிக்கு எதிரான போரட்டத்தில் விவசாயிகள் மற்றும் பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதும், என்எல்சிக்கு எதிராக தீர்மானம் போட்ட ஊராட்சி செயலர்கள் 5 பேர் பணியிட மாற்றம் செய்ததும் கண்டிக்கத்தக்கது. உலக நீர் நாள் தினத்தில் என்எல்சிக்கு எதிராக கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே இதற்கு காரணம் ஆகும்.
உலகம் முழுவதும் அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் அரசு ஆர்வம் காட்டுவது ஏன்? என்எல்சி நீர், நில ஆதாரங்களில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என ஐஐடி ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும். மேலும், என்எல்சி விவகாரத்தில் தமிழ்நாட்டின் அழிவுக்கு பாஜக உடன் திமுக கூட்டணியில் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், ஆளுநர் ஆளுநராக செயல்பட வேண்டும். அரசியல்வாதியாகச் செயல்படக் கூடாது. அவர் சார்ந்த கட்சிக் கொள்கையை வெளிப்படுத்தக் கூடாது. நீதிபதிகள் போன்று ஆளுநர்கள் நடுநிலையாக இருந்து, மாநில வளர்ச்சிக்கு முன்னேற்றமாக இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:பேருந்து நிழற்குடைக்கு ரூ.9 லட்சமா?.. மது கூடாரமாக மாறிய நிழற்குடை; கோவில்பட்டி நகராட்சியின் தில்லாலங்கடி..!