தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 23, 2019, 5:17 PM IST

ETV Bharat / state

நீதிமன்ற தடையை மீறி முதலமைச்சர் வருகைக்காக ஆற்றில் மணல் அள்ளும் மாவட்ட நிர்வாகம்!

கடலூர்: நீதிமன்ற தடையை மீறி மணல் அள்ளியது எப்படி என வெள்ளை அறிக்கை வெளியிட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மஞ்சகுப்பம் பகுதியில் நடைபெறும் பணிகள்

கடந்த 2018இல் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ரூ.2.25 கோடி மதிப்பில் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திறப்பு விழா காணப்படாமல் உள்ளது. இந்நிலையில் தற்போது 25ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த மணிமண்டபம் திறக்கபடவுள்ளது.

இதற்கான விழா ஏற்பாடுகள் கடலூர் மஞ்சநகர மைதானத்தில் பல்வேறு விதிமுறை மீறல்களுடன் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கக் கூடிய இந்த விழாவிற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பிரமாண்ட இரும்பு பந்தல் அமைக்கப்பட்டு மின்சார அலங்காரம், மின்விசிறிகள் பொருத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், விழா மேடைக்கு முதலமைச்சர் வந்து செல்லவதற்காக நல்ல நிலையில் இருக்கும் சாலையை மீண்டும் புதிய சாலையாக போடும் பணியும் நடைபெற்று வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இந்த மைதானமே தண்ணீரால் குளம்போல் சூழ்ந்து விழாவை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் எப்படியும் இந்த விழாவை நடத்தியே தீரவேண்டும் என மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்டி இரவு, பகலாக பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

மஞ்சகுப்பம் பகுதியில் நடைபெறும் பணிகள்

குறிப்பாக மைதானத்தில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளும் தோல்வியுற்றதால், மழைநீரை வெளியேற்ற வேறுவழியில்லாமல் தென்பெண்ணை ஆற்றில் இருந்து நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில் மணலை எடுத்து வந்து கொட்டி சீர்செய்கின்றனர்.

தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி இயங்க உயர் நீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில், முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக நீதிமன்ற உத்தரவை மீறி மணல் எடுத்து வருவது கண்டனத்துக்குரியது என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:மொட்ட பெத்தான் கண்மாயில் திருட்டு மணல் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details