கடலூர் மாவட்டம் முழுவதும் மர்மகாய்ச்சல் பரவி வருவதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் பருவமழை காலத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். கடலூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை டெங்கு, வைரஸ் உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சோகக்கதையும் நிகழ்ந்துள்ளது.
அதேபான்று இந்த ஆண்டும் வழக்கமாக ஏற்படும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு மட்டுமின்றி டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துள்ளது. எனவே, டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை கொசு மருந்து அடிக்கும் நடவடிக்கையே எடுக்கப்படவில்லை.
கடந்த சில தினங்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருவதால் சாலை ஓரங்கள் உள்ளிட்ட பல இடங்களில் ஆங்காங்கே கழிவு நீரோடு, மழை நீரும் தேங்கி நிற்கிறது. இதனால் அதிகப்படியான கொசுக்கள் உற்பத்தியாகிறது. கொசுக்களின் உற்பத்தியை தடுக்க மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாக அம்மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். கடலூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் குழந்தைகளுக்கு மர்மக் காய்ச்சல் பரவி வருவதால் தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்காக ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.