கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் இன்று தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதனால், மின்வாரிய ஊழியர்கள் சிதம்பரம் நான்கு வீதிகளிலும் மரங்களில் உள்ள கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி வந்தனர். இந்நிலையில், கீழ வீதியில் உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் செல்வி ராமஜெயம் மருமகன் மருந்து கடை வைத்துள்ளார்.
இந்த கடையின் முன்பு உள்ள மரத்தின் கிளைகளை பாலகிருஷ்ணன் என்ற மின்வாரிய ஊழியர் வெட்டி அப்புறப்படுத்தினார். அப்போது, ஏன் என்னுடைய அனுமதி இல்லாமல் என் வாசலில் உள்ள மரத்தை வெட்டுகிறீர்கள் என்று முன்னாள் அமைச்சரின் மருமகன் சத்தம் போட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, செல்வி ராமஜெயத்தின் உறவினர் ரமேஷ், அவரது நண்பர்கள் முத்து உள்ளிட்ட ஐந்து பேர் கூட்டாக சேர்ந்து ஊழியர் பாலகிருஷ்ணனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து மின்வாரிய ஊழியர்கள் சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அளித்திருப்பது முன்னாள் அமைச்சரின் மருமகன் மீது என்பதால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.