கடலூர்: இரா. முத்தரசன் தலைமையில் நேற்று (ஆக. 22) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்துப் பேசிய அவர், "நாடாளுமன்றம் செயல்படாமலே 21-க்கும் அதிகமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை, உச்ச நீதிமன்ற நீதிபதியே விமர்சனம் செய்துள்ளார்.
இதனால், வரும் 23ஆம் தேதிமுதல் 27ஆம் தேதி வரையில் மக்கள் நாடாளுமன்றம் என்ற நிகழ்ச்சியை நடத்தவுள்ளோம். இதற்காக, ஐந்து லட்சம் சிறு பிரதிநிதிகள் அச்சடித்து அதனை மக்களிடையே விநியோகிக்க உள்ளோம்.
இதில், மோடி அரசில் மக்கள்படும் துன்பங்களை விளக்கி உள்ளோம். ஒவ்வொரு மக்கள் நாடாளுமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றி அதனை மத்திய அரசுக்கு நாள்தோறும் அனுப்பிவைப்போம்.
வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை
தொடர்ந்து, வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கையைத் தமிழ்நாடு அரசு தாக்கல்செய்திருப்பதை வரவேற்கிறோம். இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு, பனைமரம் பாதுகாப்பு, பாரம்பரிய நெல் வகைகள் பாதுகாப்பு, 33 விழுக்காடு காடுகள் அதிகரிப்பு போன்ற திட்டங்கள் வரவேற்க கூடியதாக உள்ளது. கூடுதலாக செய்ய வேண்டியதையும் கட்சி சார்பில் எடுத்து கூறியுள்ளோம்.