கடலூர்: வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில், தொடர்மழை பாதிப்பை தொடர்ந்து கடலூர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மேலும், வெள்ளத்தில் மூழ்கிய விலை நிலங்கள் மற்றும் மழைநீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளின் குடியிருப்பு வாசிகளை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்து தாழ்வு நிலை காரணமாக கடந்த 11 மற்றும் 12ஆம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் அடை மழை கொட்டி தீர்த்தது. இதில் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தும் விலை நிலங்களை மூழ்கடித்தும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 10ஆம் தேதி முதல் இம்மாதம் 13ஆம் தேதி வரை மாவட்டத்தில் அதிகபட்சமாக கடந்த 12ஆம் தேதி 30 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் 6 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்களில் பயிர்கள் தண்ணீர் மூழ்கியுள்ளதாகவும், இதனால் 208 கிராமங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 655 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது போன்று காய்கறி உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் 12 கிராமங்களில் 123 ஏக்கர் அளவில் நீரில் மூழ்கியுள்ள நிலையில் 190 விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் என 271 வீடுகள் இரு மாத மழையில் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 63 பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.