கோவை:அவினாசி 'பெரிய கோயில்' மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "திருப்பூர் மாவட்டம், அவினாசியில் 'பெரிய கோயில்' என்று அழைக்கப்படும் அருள்மிகு அவினாசி லிங்கேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. தேவார பாடலில் இடம்பெற்ற இவ்வாலயம், அப்பகுதி மக்களின் உணர்வுகளோடும், அன்றாட வாழ்வியலோடும் கலந்துவிட்ட ஒன்று.
மே 23-ம் தேதி அதிகாலை, அருள்மிகு அவினாசி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி சிலைகள், நாயன்மார்கள் சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. முருகப்பெருனானின் வேலை பிடுங்கி அதனைக் கொண்டு சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. கோபுரங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அருள்மிகு அவினாசிலிங்கேஸ்வரர் கருவறைக்குள் நுழைந்தும் அட்டூழியம் செய்துள்ளனர். இந்த செய்திகள் பெரும் அதிர்ச்சியும், தாங்க முடியாத மன வேதனையையும் அளிக்கின்றன.
இந்நிலையில், கோயில் கோபுரத்தில் பதுங்கி இருந்ததாக ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மனநிலை சரியில்லாத அவர்தான் சிலைகளை உடைத்து, கருவறைக்குள் அட்டூழியம் செய்தார் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். ஆனால் இது நம்பத்தகுந்ததாக இல்லை.
கடந்த காலங்களிலும் அருள்மிகு அவினாசி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பல்வேறு முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 1991-ம் ஆண்டு இவ்வாலயத்தின் திருத்தேர் எரிக்கப்பட்டது. 2003-ம் ஆண்டு அம்பாள் சன்னதிக்குள் புகுந்து, ஒருவர் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது மாற்று மதத்தினரின் நூல்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆலயத்தின் பின்பகுதியில் பொதுமக்கள் வழிபட்டு வந்த சிலைகள் கடந்த ஆண்டு சேதப்படுத்தப்பட்டன. இப்படி இக்கோயில் குறிவைத்து தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்துவரும் நிலையில் தான், தற்போதைய கொடூரமும் நிகழ்ந்திருக்கிறது.
இதற்கெல்லாம் தனி நபர் ஒருவர் தான் காரணம், அதுவும் மனநிலை சரியில்லாதவர்தான் காரணம் என்பதை அவிநாசி லிங்கேஸ்வரரின் பக்தர்கள் யாரும் நம்பவில்லை. தமிழகத்தில் ஆளும் திமுக அரசு, இந்து மதத்தின் மீதும், இந்து கடவுள்களின் மீது மட்டும் நம்பிக்கையற்ற அரசு.