மராட்டிய மாநிலம், அமராவதி நாடாளுமன்ற (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், பாஜகவைச் சார்ந்த நவ்நீத் ராணா. இவர், தனது சாதி சான்றிதழில், சாதியின் பெயரை மாற்றி முறைகேடு செய்து, அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றதாகவும்; இதனால் அத்தொகுதி மக்களையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் ஏமாற்றி இருப்பதாகவும் தமிழ்ப்புலிகள் கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனால், அவர் பதவி விலக வேண்டும் என்றும், அவரது பதவியை ரத்து செய்து கைது செய்ய வேண்டும் என்றும் இணைய வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராவணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், "நவ்நீத் ராணாவின் பதவியை ரத்து செய்து, கைது செய்ய வேண்டும். அவரது சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், பாஜக எம்.பி.,க்கள் அனைவரது சாதி சான்றிதழ்களையும் சரிபார்க்க வேண்டும் என்றும்; இதற்கு முன்னாள் நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்திட வேண்டும் என்றும் தமிழ்ப்புலிகள் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்- உதயநிதி ஸ்டாலின்