கோயம்புத்தூர்: கோட்டைமேடு பகுதியில் உள்ள தமுமுக அலுவலகத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா இன்று (ஜூலை 9) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
"கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தீவிரமாக செயல்படுத்திவருகிறது. இதனால் தமிழ்நாடு விவசாயிகள் பாதிக்கக்கூடும் என தமிழ்நாடு முதலமைச்ச்ர், கர்நாடக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தாலும், கர்நாடக அரசு அதனை கண்டுகொள்ளாமல் தீவிரமாக அணை கட்டுவதை செயல்படுத்தி வருகிறது.
இதனால் தங்களது விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவர். இது குறித்து விவாதிக்க ஜூலை 12ஆம் தேதியன்று தமிழ்நாடு முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
யூஏபிஏ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, 84ஆவது வயதில் கொடும் சிறையில் அடைக்கப்பட்டு ஸ்டேன் சுவாமி சில தினங்களுக்கு முன்னால் உயிரிழந்தார். இதனை சாதாரண உயிரிழப்பு என எடுத்துக்கொள்ள முடியாது. பிரதமரும், உள்துறை அமைச்சரும் அவர் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைத்து அவரை கொலை செய்துள்ளனர் என்றுதான் குறிப்பிட வேண்டியுள்ளது.
கோயம்புத்தூரில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள். இந்நிலையில் போத்தனூர் கஸ்தூரி நகரில் தமுமுக நடத்தி வந்த சிறிய மருத்துவமனையை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அரசு அலுவலர்கள் இடித்துள்ளனர்.
மதுக்கரை தாசில்தார், போத்தனூர் காவல் ஆய்வாளர் ஆகிய இருவரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விசுவாசிகளாக செயல்பட்டு, அவரது அறிவிப்பின் பேரில் மருத்துவமனையானது இடிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனை அரசு நிலத்தில் இருந்திருந்தாலும் ஒரு வாரத்துக்கு முன் நோட்டீஸ் அளித்திருக்க வேண்டும். ஆனால் அதனை செய்யாமல் இடித்துள்ளனர்.
எனவே அந்த அலுவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்க உள்ளோம். இதையடுத்து ஆயுள் தண்டனை பெற்று இருக்கக்கூடியவர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தால், அவர்களை விடுவிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:விரைவில் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு - பழனிவேல் தியாகராஜன்