கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூரில், துணிக்கடை அதிபர் வீட்டின் கருங்கல் சுற்றுச்சுவர் கடந்தாண்டு இடிந்து விழுந்தது, இதில் 17 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நடந்து முடிந்து ஓராண்டான நிலையில், 17 பேர் உயிரிழந்ததன் முதலாம் ஆண்டு அஞ்சலி இன்று நடூரில் அனுசரிக்கப்பட்டது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தவிர, அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளுக்கு அஞ்சலி செலுத்த காவல் துறை அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில், தடையை மீறி நடூருக்குச் செல்ல முயன்ற சமூக நீதி கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். கோவை மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து நடூருக்கு ஊர்வலமாகச் செல்ல முயன்ற திராவிட பண்பாட்டு கூட்டு இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
மேலும், தரையில் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட திராவிட பண்பாட்டு கூட்டியகத்தைச் சேர்ந்தவர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம் நடூரில் மீண்டும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள சுவரை இடிக்க வேண்டும், அந்தச் சுவரை தீண்டாமைச்சுவர் என அறிவிக்க வேண்டும், சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
மேலும் 17 பேர் உயிரிழந்த இடத்தில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் எனவும், அங்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: 7.5 % இட ஒதுக்கீடு - தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் எம்.பி.பி.எஸ் சீட்: தமிழ்நாடு அரசு அதிரடி