கோவை துடியலூர் ஜிஎன் மில் அருகே சுக்ராம்பாளையம், மேற்கு தோட்டம் முருகன் கோவில் பகுதியில் லட்சுமி என்பவர், புவனேஷ்வரி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் மளிகை கடை நடத்தி வருகின்றார். இவர் கடந்த ஒரு மாதமாக இங்கு மளிகை கடை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், ஒரு மாதமே ஆனநிலையில், திடீரென கடையை காலி செய்ய கூறி கட்டிட உரிமையாளர் புவனேஷ்வரி கூறியுள்ளார். இதுதொடர்பாக, இவர்களுக்குள் பிரச்னை இருந்துள்ளது. புவனேஷ்வரி அடியாட்களை கொண்டும், இவர்களை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
புதன்கிழமை வழக்கம் போல், கடையை பூட்டி சென்ற நிலையில், வியாழக்கிழமை காலையில் கடையை திறக்க சென்ற போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, மளிகை பொருள்களையும், தீபாவளி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த துணிகளையும், மர்ம நபர்கள் எடுத்துச்சென்றுள்ளனர்.
இதனையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது வாகனத்தில் மர்ம நபர்கள் மளிகை பொருள்களை ஏற்றி சென்றது தெரிய வரவே, காலையில் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். ஆனால் இரவு வரை புகார் எடுக்காமல் காவல்துறையினர் அலட்சிய போக்கோடு இருந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதனால், விரக்தியடைந்த லட்சுமியின் குடும்பத்தினர் மேட்டுப்பாளையம் - கோவை சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய காவல்துறை அவர்களின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.