தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 10 வயது சிறுவன் பலி!

கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் முகமது ஃபாசில் உயிரிழந்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 8, 2023, 10:28 AM IST

கோயம்புத்தூர்: கோவை செல்வபுரம் கல்லாமேடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் தாஜுதீன். இவருக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சொந்தமாக வீடு உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு வீடு பழுதடைந்ததை அடுத்து இவர் அதே பகுதியில் மற்றொரு வீட்டில் தனது மனைவி மற்றும் மகன் உடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது 10 வயது மகனான முகமது ஃபாசில் கடந்த 3-ஆம் தேதி மாலை பழுதடைந்த வீடு இருக்க கூடிய பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து அந்த வீட்டின் உள்பகுதிக்குள் விழுந்துள்ளது. அதை எடுக்க சிறுவன் உள்ளே சென்ற போது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து சிறுவனின் மீது விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுவன் படுகாயமடைந்தார்.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அங்குச் சென்ற பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சிறுவனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் மருத்துவர்கள் கடந்த நான்கு நாட்களாக சிறுவனுக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சிறுவன் முகமது ஃபாசில் உயிரிழந்தான். ஏற்கனவே கோவை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மழையால் சேதம் அடைந்த வீடுகள் இடியும் தருவாயில் இருந்தால் அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.

தற்போது மழை காலம் துவங்க உள்ளதால் குடியிருப்பு பகுதிகளில் சிதலமடைந்துள்ள கட்டடங்கள் மழையால் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அல்லது மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், குழந்தைகள் விளையாட செல்லும் இடங்களில் பாதுகாப்பாக இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக சம்பவம் நடந்த அன்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உடல் நலம் குறித்தும் நேரில் சென்று விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தென்காசியில் தீ விபத்தால் 100 டன் தென்னை நார் நாசம்

ABOUT THE AUTHOR

...view details