கோயம்புத்தூர் : கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் சுதந்திர போராட்ட தியாகி பெட்டையனின் மகன். சுதந்திர போராட்ட தியாகியான பெட்டையன் 1934 ஆம் ஆண்டு காந்திஜியை தன்னுடைய சொந்த கிராமத்திற்கு அழைத்து வந்து சுதந்திர போராட்ட வேட்கையை பொதுமக்களிடையே ஏற்படுத்தினார்.
இது குறித்து சுதந்திர போராட்ட வீரரின் மகன் ராஜேந்திரன், “போராட்ட காலத்தில் பல்வேறு இன்னல்களை சந்தித்த தன்னுடைய தந்தை சிறை சென்று சுதந்திரத்திற்காக பாடுபட்டார். மேலும் தன்னுடைய கிராமத்திற்கு மகாத்மா காந்தியை வரவழைக்க முயற்சிகள் மேற்கொண்டு 1934ஆம் ஆண்டு காந்திஜியை தன்னுடைய சொந்த கிராமத்திற்கு அழைத்து வந்து சுதந்திர போராட்ட வேட்கையை பொதுமக்களிடையே ஏற்படுத்தினார்.
அது மட்டும் அல்லாமல் அனைவரும் சாதி, மதம் கடந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக கிராமத்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது அதன் பயனாக அரசு உயர்நிலைப் பள்ளியும் ஏழை மாணவர்களுக்கு தங்குவதற்காக 5 விடுதிகளும் கட்டப்பட்டன. அதற்கு மகாத்மா காந்தி பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படி பாடுபட்டு கொடுத்த சுதந்திரத்தை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
அதே சமயம் தலைவர்களின் வரலாற்றையும் தெரிந்து கொண்டு பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க வேண்டும்” என்றார். அடிபட்டு மிதிபட்டு வாங்கிய சுதந்திரத்தை பேணி காக்க வேண்டும், ஏழ்மை நிலையிலுள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்துக்கு அரசு உதவ வேண்டும் என்கிறார் சுதந்திர போராட்ட வீரரின் மகளான சந்திர காந்தி.
சுதந்திர போராட்ட வீரர் மகள் சந்திரகாந்தி, “அந்தக் காலத்தில் அடிபட்டும் சிறை சென்றும் பல்வேறு கொடுமைகளை சந்தித்து முன்னோர்கள் பலர் சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தனர். அந்த சுதந்திரம் 74 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் சில சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டியது உள்ளது.