கோவை மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர் உழவர் சந்தைகளில் உள்ளூர் விவசாயிகள் உற்பத்தி செய்த காய், பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்வதற்கு கடைகளை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கவில்லை. ஆனால் மலை மாவட்டங்களான நீலகிரி, ஊட்டி, கோத்தகிரி போன்ற இடங்களில் விளையும் காய்கறிகளை விற்பதற்கு மட்டும் உழவர் சந்தைகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆகவே உள்ளூர் விவசாயிகளுக்கும் ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர் போன்ற பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகளில் இடம் ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
உள்ளூர் விவசாயிகளுக்கு உழவர் சந்தையில் இடம் ஒதுக்கி தரவேண்டும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி, "கோவையில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, சூலூர் போன்ற பகுதிகளில் கோஸ், பீட்ரூட் போன்ற காய்கறிகளை விளைவித்துவருகிறோம். ஆனால் அதை உழவர் சந்தைகளில் விற்பதற்கு மாவட்ட நிர்வாகம் இடம் தரவில்லை, ஆனால் மலை மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறிகளை விற்க மட்டும் இடம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், இது உள்ளூர் விவசாயிகளை புறக்கணிக்கும் செயலாக தெரிகிறது எனவும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக கோவையில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளிலும் உள்ளூர் விவசாயிகளுக்கும் இடம் ஒதுக்கி தரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:குறைந்த வெங்காய விலை - போட்டிப் போட்டுக் கொண்டு வாங்கிய மக்கள்!