சூலூர் சீரணி மைதானத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நேற்று மாலை பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. சூலூர் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "50 ரூபாய் கொடுத்து கேபிள் தொலைக்காட்சியினை முன்பு பார்த்தீர்கள், ஆனால் இப்போது அந்த கட்டணம் 300 ரூபாய் ஆகி இருக்கின்றது.
300 ரூபாய்க்கு கிடைத்த சமையல் எரிவாயு உருளை விலை 900 ரூபாயை எட்டியிருக்கின்றது. தேர்தலில் வென்ற பின் பழைய கட்டணத்திலேயே கேபிள் சேனல் கிடைக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லி இருக்கின்றார். இலவசமாகவே கேபிள் சேனல்களை மக்கள் பார்ப்பதற்கு ஸ்டாலின் திட்டம் வைத்திருப்பார்" என்றார்.
நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர்கள்அடிப்படை அறிவு, மனிதாபிமானம் இல்லாமல் சோதிக்கப்பட்டனர் என குற்றம்சாட்டிய அவர், மத்திய அரசுக்கு ஆதரவு அளித்த அதிமுக, நீட் தேர்வை ரத்து செய்யாமல் தமிழ்நாட்டில் நுழையாதீர்கள் என சொல்லும் நெஞ்சுரம் ஏன் இல்லை? எனவும் கேள்வி எழுப்பினார்.