கோயம்புத்தூர்:கோவை அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் அக்கட்சியின் கோவை வடக்கு, கோவை தெற்கு, மாநகர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒன்பது பேர் உள்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் எனச் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், "அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்தும் அதிமுகவைக் காட்டிக்கொடுத்தவர்கள் சின்னாபின்னமாகிப் போயுள்ளார்கள்" எனப் பேசினார்.
கிளைச் செயலாளர்கள் கட்சியின் இதயம்
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி, "தற்பொழுது நடைபெறவுள்ள கிளைச் செயலாளர்கள் தேர்தல் கட்சியின் இதயம் போன்றது.
யார் கழகத்திற்காகச் செயல்படுகிறார்களோ அவர்களுக்குத்தான் பொறுப்புத் தர வேண்டும். சொன்ன வேலையைச் செய்திருந்தால் இந்நேரம் ஆளும்கட்சியாக இருந்திருப்போம்.
ஆர்ப்பாட்டம் என்றாலே கோவை நம்பர் 1
ஆர்ப்பாட்டம் என்றாலே கோவை நம்பர் 1
மேலும், ஆர்ப்பாட்டம் என்றாலே கோவை நம்பர் 1. விளம்பரத்திற்கான ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. திமுக கூட்டத்தில் லட்சம் பேர் கூடினார்கள். அப்போது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை, அப்போது கரோனா வராதா, அதிமுக பொதுக்கூட்டமோ ஊர்வலமோ சென்றால் மட்டும் ஏன் வழக்குப் பதிவு செய்கிறார்கள்?
எங்கள் மீதுதான் குற்றம் சுமத்துகிறார்கள்
எங்கள் மீதுதான் குற்றம் சுமத்துகிறார்கள்
அதிமுக ஆட்சியின்போது சாலை வேலைகளுக்காகத் தொடங்கப்பட்ட வேலைகளை திமுக நிறுத்திவிட்டது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபொழுதும் எங்கள் மீதுதான் குற்றம் சுமத்தினார்கள். தற்போது ஆளும் கட்சியாக இருக்கும்போதும் எங்கள் மீதுதான் குற்றம் சுமத்துகிறார்கள்.
யார் தடுத்தாலும்...
மழை நீர் தேங்கியபொழுது சீர்மகு நகரம் திட்டம் என்று கூறுகிறார்கள். ஆனால், சீர்மிகு நகரம் திட்டம் என்பது மத்திய அரசு கொண்டுவந்த திட்டம். திமுக தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் பெயருக்கு இரண்டு மூன்று வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்கள். 9ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ள மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். யார் தடுத்தாலும் நாம் பார்த்துக் கொள்ளலாம்" என்றார்.
முன்னதாக காவல் துறையினர் கூட்டம் சேரக் கூடாது எனவும், வாகனங்களைச் சாலைகளில் நிறுத்தக் கூடாது என்றும் காவல் துறையினர் கூறியதால் அதிமுகவினர் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
5 தீர்மானங்கள்
மேலும், அதிமுக அமைப்புகளின் பொதுத்தேர்தலை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திட வேண்டும், மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து வருகின்ற 9ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும், 22, 23 தேதிகளில் நடைபெறவுள்ள கோவை மாவட்ட கிளைக் கழக நிர்வாகிகள், பேரூராட்சி, வார்டு, நகர, மாவட்ட கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்களில் போட்டியிட விரும்புபவர்கள் அமைதியான முறையில் தேர்தலை நடத்துவது, கோவை மாவட்டத்தில் நடைபெற உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக நூறு விழுக்காடு வெற்றிபெறப் பாடுபடுவது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாகவும் நியாயமான முறையிலும் நடத்திட மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுதல் ஆகிய ஐந்து தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: ரஜினியை சந்தித்த சசிகலா;பின்னணி என்ன?