கோவை மாவட்டம், பொள்ளாச்சி தனியார் கல்லூரியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தேர்தல் அலுவலர்களுக்கு வாக்குப்பதிவின் போது பின்பற்றவேண்டிய விதிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், தேர்தல் பணிக்குச் செல்லும் அலுவலர்கள் தபால் வாக்குகளைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இதனைக் கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜாமணி ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகளுக்கு 14 ஆயிரத்து 750 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்றாயிரத்து 70 வாக்குச்சாவடிகளில், நானூற்று 70 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன.
கோவை மாநகர பகுதியில் மட்டும் 340 வாக்குச்சாவடிகளும், ஊரக பகுதியில் 130 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்துவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாக்காளர்கள் அனைவரும் 100 விழுக்காடு வாக்களிக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் அறிவுரை. அதன்படி அரசு தேர்தல் நாளில் அரசு நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை மாவட்டத்தில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட எட்டு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் இரண்டு கோடி ரூபாய்க்கு உரிய ஆவணங்கள் பெறப்பட்டதால் அந்த தொகை மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளது” என்றார்.