தொழில்துறை மூலப் பொருட்களின் விலை ஏற்றத்தைக் கண்டித்து, இன்று (டிச.16) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று கோயம்புத்தூர் மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்துறை அதிபர்கள் சங்கம், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு உடனடியாக தங்களை அழைத்து பேசுவதோடு, மூலப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
400 நிறுவனங்கள் மூடல்:
வேலை நிறுத்தப் போராட்டத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட குறு, சிறு தொழில்நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிறு குறு தொழில் அதிபர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் தனபால், "தொழில்துறையில் மூலப் பொருட்களின் விலையேற்றம் என்பது 30 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்ததால், தங்களால் அந்த விலைக்கு மூலப்பொருட்களை வாங்கி உற்பத்தி செய்ய இயலாது.
எனவே, அரசு உடனடியாக இதைக் கட்டுப்படுத்த வேண்டும். எங்களை அழைத்து பேசுவதோடு, மூலப்பொருட்களுக்கு ஆண்டிற்கு ஒரு முறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இதற்கென ஒரு குழு அமைத்து, அக்குழுவில் எங்களையும் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக மூலப்பொருள்கள் வங்கியை மீண்டும் தொடங்க வேண்டும்.
காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் சிறு, குறு தொழில்நிறுவனங்கள்!
வருடத்திற்கு 5 கோடி ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை எல்லாம் அரசு உடனடியாக பரிசீலனை செய்து அறிவிப்பாக வெளியிட வேண்டும். இல்லையென்றால், கால வரையற்ற வேலை நிறுத்தம் என்பது தொடரும்.
இப்போராட்டத்தால் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட உள்ளூர், வெளிமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என்று தெரிவித்தார்.