கோவை:முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியுடைய தங்கையின் மருமகன் சிவமூர்த்தி(47). திருப்பூர் கருமாரம்பாளையம் பகுதியை சேர்ந்த இவர், பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்திவந்தார். இவருடைய மனைவி துர்கா வைஷ்ணவி. இவர்களுக்கு 3 வயதில் மகள், ஒன்றரை வயதில் மகன் உள்ளனர்.
2018ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி சிவமூர்த்தி கோவைக்கு சென்றுவருவதாக வீட்டில் கூறிவிட்டு அவரது சொகுசு காரில் புறப்பட்டு சென்றார். அதன்பிறகு இரவு அவர் வீடு திரும்பவில்லை என அவருடைய தந்தை சின்னசாமி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், "ஜூன் 26ஆம் தேதி இரவு அவரது கார் கிருஷ்ணகிரி, வாணியம்பாடி சோதனைச் சாவடிகள் வழியாக கடந்துசென்றது கண்டறியப்பட்டது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் காவலர்களுக்கு திருப்பூர் காவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
குற்றவாளிகள் வாக்குமூலம்
ஆம்பூர் நெடுஞ்சாலை ரோந்து காவலர்கள் ஜூன் 27ஆம் தேதி வெங்கிளி என்ற இடத்தில் நள்ளிரவு 12.30 மணியளவில் வாகன சோதனை நடத்தியபோது அந்த வழியாக வந்த சிவமூர்த்தியின் காரை மடக்கிப்பிடித்தனர். காரில் இருந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் கோவை மாவட்டம் காரமடை பகுதியை சேர்ந்த விமல் (35), கவுதமன் (22), மணிபாரதி (22) என்பது தெரியவந்தது.
3 பேரையும் ஆம்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது, ரூ. 50 லட்சம் கேட்டு தொழில் அதிபர் சிவமூர்த்தியை கடத்திச்சென்று கழுத்தை நெரித்து கொலை செய்ததும், பிணத்தை 2 நாள்களாக காரிலேயே வைத்து சுற்றிவிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் கல்லைக் கட்டி வீசிச்சென்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து காவலர்கள் கெலவரப்பள்ளி அணையில் இருந்து சிவமூர்த்தியின் உடலை மீட்டனர். சிவமூர்த்தியின் கை, கால் மற்றும் முகம் ‘டேப்பால்’ சுற்றப்பட்டு இருந்தது. உடலோடு ஒரு மைல்கல்லும் சேர்த்து கட்டப்பட்டு இருந்தது. இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய மூர்த்தி (35) என்பவரையும் திருப்பூர் காவலர்கள் காரமடையில் பிடித்தனர்.
சுற்றுலா செல்வோம் எனக்கூறி போடப்பட்ட ஸ்கெட்ச்
கைதானவர்களில் ஒருவரான விமல் திருப்பூரில் பனியன் நிறுவனங்களுக்கு ஆர்டர் பெற்றுக்கொடுக்கும் ஏஜெண்ட் அலுவலகம் நடத்தி வந்தார். இதன்மூலம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிவமூர்த்திக்கும், விமலுக்கும் பழக்கம் இருந்துள்ளது.
இருவரும் சேர்ந்து சுற்றுலா செல்வது வழக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு விமலுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனில் சிக்கித் தவித்துள்ளார். அப்போது, பணம் கொடுத்து உதவுமாறு சிவமூர்த்தியிடம் விமல் கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.