தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 5, 2020, 8:52 AM IST

ETV Bharat / state

'முதலமைச்சர் வேட்பாளராக யார் அறிவிக்கப்பட்டாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்' - அதிமுக எம்.எல்.ஏ

கோயம்புத்தூர்: ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரில் யாருக்கு ஆதரவு என்பதைவிட யார் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கந்தசாமி தெரிவித்தார்.

kandasamy
kandasamy

தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்திலும் கடும் மோதல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், கட்சியில் யாருக்கு கூடுதல் அதிகாரம் என்பது போன்ற பிரச்னைகளும் எழுந்துள்ளதாகத் தெரியவருகிறது.

இதனைத்தொடர்ந்து, வருகின்ற 7ஆம் தேதி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்திருந்தார். இதனிடையே, அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் அனைவரும் அக்டோபர் 6ஆம் தேதி சென்னை திரும்ப வேண்டும் எனத் தகவல் வெளியானது. ஆனால், ஓபிஎஸ் இதனைப் புறக்கணித்து தேனி சென்றதாகத் தெரிகிறது.

இந்நிலையில் சூலூர் அருகே நடைபெற்ற கால்பந்து போட்டி பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "எம்.எல்.ஏ.-க்களை சென்னை வரச்சொல்லி எந்த அழைப்பும் வரவில்லை. ஓபிஎஸ், இபிஎஸ் இருவரில் யாருக்கு ஆதரவு இருக்கின்றது என்பதை விட, யார் முதலமைச்சர் வேட்பாளராக வந்தாலும் தொண்டர்களும், மக்களும் ஏற்றுக்கொள்வார்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நுகர்வோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வேளாண் சட்டம்' - வேளாண் அறிஞர் பாமயன் எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details