கோயம்புத்தூர்: மைசூருவைச் சேர்ந்த பழங்குடியின தம்பதியினர் ஒருவர், தங்களது ஐந்து மாதக் குழந்தையுடன் நேற்று முன்தினம் (செப்.28) பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலைக்கு வந்துள்ளனர்.
அப்போது அங்கு பயணிகள் நிழற்குடை அருகே தங்கியுள்ளனர். அந்தசமயம் அவ்விடத்திற்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் குழந்தையின் தாயிடம் ரூ.50 கொடுத்து, குழந்தைக்கு ஜெல்லி வாங்கி கொடுக்கும்படி கூறியுள்ளனர்.
குழந்தை கடத்தல்
இந்நிலையில் குழந்தையின் தாயார் குழந்தையை அடையாளம் தெரியாத நபர்களிடம் கொடுத்துவிட்டு, ஜெல்லி வாங்க சென்றுள்ளார். பின் ஜெல்லி வாங்கி திரும்பி வந்த அவர் பார்த்தபோது, குழந்தையை அடையாளம் தெரியாத நபர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வைத்து கடத்திச் சென்றுள்ளனர்.
இதையடுத்து குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் வால்பாறை துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் ஆறு தனிப்படை அமைத்து பொள்ளாச்சி மற்றும் கேரளா பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.