கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் நவமலைப்பகுதியில் ஒற்றைக் காட்டு யானை, மலைவாழ் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக அந்த ஒற்றைக் காட்டு யானை, வனப்பகுதியில் இருந்து வெளியேறி அர்த்தனாரி பாளையம் கிராமத்தில் விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களைச் சேதப்படுத்தியதோடு விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவரையும் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், இன்று அதிகாலை அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டியை காட்டு யானை துதிக்கையால் தூக்கி வீசியுள்ளது. இதில் படுகாயமடைந்த மூதாட்டியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வனத் துறையினர் அனுப்பி வைத்தனர்.
காட்டு யானையின் அட்டகாசத்தை தாங்க முடியாத பொதுமக்கள் அந்த யானையை, உடனடியாகக் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என நா.மூ. சுங்கம் என்னும் பகுதியில் மனிதச் சங்கலி போராட்டத்தில் ஈடுபட்டும் வாகனங்களை சிறைப் பிடித்தும் வருகின்றனர்.