பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது. இதனால் அந்தக் குற்றவாளிகள் மீது போடப்பட்ட வழக்கு விசாரணை பாரபட்சமின்றி நடைபெற வேண்டும் எனவும் இன்று இது தொடர்பான ஆர்ப்பாட்டத்திற்கு பொள்ளாச்சி காவல் துறையினர் அனுமதி மறுப்பதாகவும் கூறி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் வாசுகி தலைமையில் இந்த மனு அளிக்கப்பட்டது.
பொள்ளாச்சி வழக்கை பாரபட்சமின்றி நடத்த மாதர் சங்கம் வலியுறுத்தல்!
கோவை: பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கு விசாரணை பாரபட்சமின்றி நடைபெற வேண்டுமென ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் வாசுகி வலியுறுத்தியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாசுகி, “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள் மீது குண்டர் சட்டம் போடுவதற்கு முன்பு சட்ட விதிமுறைகளை சரியாகப் பயன்படுத்தாமல் விட்டது அவர்கள் குண்டர் சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்ட அதற்கு காரணம் எனவும் ஆளும் கட்சிக்கு தொடர்பு எனப் பல்வேறு அரசியல் கட்சியினர் கூறிவரும் நிலையில் காவல் துறையின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” எனத் தெரிவித்தார்.
மேலும் உயர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு நடந்துகொள்ள வேண்டும் எனவும் தற்போது உயர் கல்வியில் மதச்சாயம் ஜாதி உள்ளிட்டவை அதிகரித்துள்ளதாகவும் வலதுசாரி சித்தாந்தம் அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என்றும் அவர் கூறினார்.