கோவை: கோவை - மேட்டுப்பாளையம் இடையே உள்ள ரயில் தண்டவாளங்கள் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக கடந்த 2 மாதங்களாக புதிதாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மாற்றப்பட்டுள்ள தண்டவாளங்கள் ஏற்கனவே இருந்த தண்டவாளங்களில் உயரத்தைவிட 1 அடி உயரமாக உள்ளது. அது அங்கு ஏற்கனவே இருந்த தார் சாலையில் இருந்து ஒரு அடி உயரமாக உள்ளதால் அவ்வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு 7 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் பயணிகள் ரயிலுக்காக ரயில்வே கேட் மூடப்படும் நேரத்தில் அவ்வழியாக சரக்கு ஏற்றி வந்த லாரி தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போது தண்டவாள உயரம் காரணமாக தண்டவாளத்தை கடக்க முடியாமல் தண்டவாளத்தின் நடுவே பழுதாகி நின்றது.
அந்நேரம் வந்த கோவை - மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலுக்கு, கேட் கீப்பர் உடனடியாக சிகப்பு விளக்கை காண்பித்து லாரிக்கு 100 மீட்டர் முன்பாக ரயிலை நிறுத்தினார். இதன் காரணமாக லாரி மீது ரயில் மோதாமல் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் லாரியை தண்டவாளத்தில் இருந்து தள்ளி நகர்த்த முற்பட்டனர்.