கோவை மாவட்டம், பண்ணி மடையைச் சேர்ந்த 7 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததற்காக, அப்பகுதியில் வசித்து வந்த சந்தோஷ்குமார் என்பவரை துடியலூர் காவல்துறையினர் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கோவை சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிக்கு, கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்ததோடு, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு அரசானது ரூ.10 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மரண தண்டனையை உறுதி செய்வதற்காக, இவ்வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதே போல தன் மீதான தண்டனையை ரத்து செய்யக்கோரி சந்தோஷம், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, சந்தோஷ்குமார் தான் குற்றவாளி என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் உள்ளபோதும், இதில் மேலும் ஒரு நபருக்கு சம்மந்தம் இருப்பதாகத் தெரிய வந்துள்ளதால் திறமையான பெண் காவல்துறை அலுவலர்களைக் கொண்டு மறு விசாரணை நடத்த வேண்டும் என்று சிறப்பு நீதிமன்ற தீர்ப்பளித்தது.
சந்தோஷ்குமார் மீதான போக்சோ குற்றச்சாட்டு மற்றும் கொலை குற்றச்சாட்டு காவல்துறையால் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், சந்தோஷ் குமார் குற்றவாளி என்ற கீழமை நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து, அவருக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
அதே சமயம், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள், சமூகத்துக்கு அச்சுறுத்தலானவர்கள், எந்த விதத்திலும் தங்களை திருத்திக் கொள்ளமாட்டார்கள் என கருதும். அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ள நீதிபதிகள், சந்தோஷ்குமார் மீதான மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தனர்.
எனினும் 25 ஆண்டுகள் வரை அவரை விடுதலை செய்யவோ, தண்டனை குறைப்போ வழங்கக்கூடாது என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்ற கீழமை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்த நீதிபதிகள், இதுவரை அத்தொகை வழங்கியிருக்காவிட்டால், அதனை மூன்று மாதத்திற்குள் வழங்க வேண்டுமென அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
அதே போல முதல் தகவல் அறிக்கையில் உள்ள குறைபாடுகள் குறித்து டி.ஐ.ஜி அந்தஸ்திற்கு குறையாத அலுவலர்களை நியமித்து, நடவடிக்கை குறித்த அறிக்கைத் தாக்கல் செய்ய டிஜிபி க்கு உத்தரவிட்டுள்ளனர்.
ஒவ்வொரு குற்றம் நடைபெற்ற இடமும் விசாரணைக்கு முக்கியம் எனும் போது, சம்மந்தப்பட்ட இடத்தில் ஊடகங்களை சுதந்திரமாக உலவ அனுமதித்த சம்மந்தப்பட்ட காவல்துறை அலுவலருக்கு எதிராக டிஐஜி அந்தஸ்திற்கு குறையாத அலுவலரை கொண்டு விசாரணை நடத்தவும் டிஜிபிக்கு உத்தரவிட்டனர்.