கோயம்புத்தூர்: திருப்பூரில் 930 கோடி ரூபாய் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில், அந்நிறுவனத்தின் பெண் இயக்குநரை கடத்தி ரூ.2.5 கோடி லஞ்சமாக பணம் பறித்ததாக, அப்போது மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமாருக்கு எதிராக சிபிஐ கடந்த 2011ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
2013ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத் குமார், அப்போதைய சிபிசிஐடி டிஎஸ்பி ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், இடைத்தரகர்களான திருநெல்வேலியைச் சேர்ந்த ஜான் பிரபாகரன் என்கிற அண்ணாச்சி, திருப்பூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்கிற தரணி செந்தில்குமார் ஆகிய 5 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 10 ஆண்டுகளாகியும், 'குற்றச்சாட்டு பதிவு' நடைமுறை செய்யப்படாததால் வழக்கு நிலுவையில் இருந்தது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த நவம்பர் 4ஆம் தேதி இந்த வழக்கு விசாரணையை தொடங்க வேண்டும் எனவும், அடுத்தாண்டு ஜூலைக்குள் வழக்கை முடிக்கவும், அதற்கு முன்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் குற்றசாட்டு பதிவு செய்ய வேண்டும் எனவும் கோவை சிபிஐ நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.