மின் வாரிய தலைவர் ஊழியர்களின் பிரச்னைகளைக் கேட்பதில்லை, மின்சார சங்கங்களை அழைத்து குறைகளை கேட்டறிவதில்லை என்று கடந்த சில மாதங்களாக குற்றச்சாட்டுகள் இருந்துவந்தன. கடந்த சில தினங்களுக்கு முன்புகூட மின்வாரியத் தலைவரைக் கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்தப் போராட்டங்களுக்குப் பின்பும் மின்வாரியத் தலைவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், இன்று சென்னையில் உள்ள மின்வாரிய தலைவரின் அலுவலகத்தை மின்வாரிய ஊழியர்கள் முற்றுகையிட்டனர். அதன் தொடர்ச்சியாக கோவையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பும் மின்வாரிய ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மின்வாரியத் தலைவர் தங்களை அழைத்துப் பேசுவதில்லை, எங்களது குறைகளைக் கேட்டறிவதில்லை என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும் காலி பணியிடங்கள் நிரப்பப்படாததனால் தற்போது உள்ள மின்வாரிய ஊழியர்களுக்குப் பணிசுமை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றும், மின் வாரிய பணியாளர்கள் பணியில் இருக்கும் பொழுது ஆபத்து ஏதேனும் இருந்தால் அவர்களுக்கு உரிய நிவாரணம்கூட வழங்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தனர்.
இவற்றையெல்லாம் மின்வாரியத் தலைவர் என்னவென்றுகூட கேட்காமல் இருந்துவருகிறார் என்று கூறிய அவர்கள், உடனடியாக மின்வாரியத் தலைவர் தங்களைச் சந்தித்து தங்களது குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க:காவிரிப்படுகை ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் அனுமதி -மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கண்டனம்