தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் முடிவுகள்: கொங்கு மண்டலத்தின் கடந்த கால வரலாறு

தமிழ்நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து வருடங்களுக்கு எழுதப்போவது யார் என்பதற்கான விடை இன்று தெரிந்துவிடும். இதற்கு முன் இரண்டு கழகங்களும், மற்ற கட்சிகளும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை முறை வென்றிருக்கின்றன?

kongu mandalam
kongu mandalam

By

Published : May 2, 2021, 8:51 AM IST

கொங்கு மண்டலம்:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் திமுகவின் முகமாக மு.க. ஸ்டாலினும், அதிமுகவின் முகமாக எடப்பாடி பழனிசாமியும் இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறார்கள்.

சட்டப்பேரவைக்குள் முதலமைச்சராக ஸ்டாலின் நுழைவாரா இல்லை எடப்பாடி பழனிசாமி நுழைவாரா என்பது இன்று இரவுக்குள் தெரிந்துவிடும்.

இப்படிப்பட்ட சூழலில் கொங்கு மண்டலம் என அழைக்கப்படும் தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் கடந்த கால தேர்தல்களில் எந்த கட்சி அதிக முறை ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது என்பதை தொகுத்து வழங்குகிறது ஈடிவி பாரத்.

கொங்கு மண்டலம் என அழைக்கப்படும் மேற்கு மண்டலம் தமிழ்நாட்டின் மேற்கில் அமைந்துள்ளது. இந்த மண்டலத்தில் வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தினர் அதிகளவில் வாழ்கின்றனர். கொங்கு மண்டலமானது அதிமுகவின் கோட்டை என அக்கட்சியினரால் அழைக்கப்படுகிறது.

மண்டலத்தை பற்றிய பறவை பார்வை:

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கரூர், கோவை ஆகிய ஒன்பது மாவட்டங்கள் இருக்கின்ரன. 9 மாவட்டங்களையும் சேர்த்து மேற்கு மண்டலத்தில் மொத்தம் 61 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன.

தேர்தல் முடிவுகள்: கொங்கு மண்டலத்தின் கடந்த கால வரலாறு

கிருஷ்ணகிரி மாவட்டம்:

மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன. இதில் ஊத்தங்கரையும், வேப்பனஹள்ளியும் 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொகுதிகள் ஆகும்.

ஊத்தங்கரை சந்தித்த இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் (2011, 2016) அதிமுகவும், வேப்பனஹள்ளி சந்தித்த இரண்டு பேரவைத் தேர்தல்களில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

பர்கூரில் ஒன்பது முறையும், கிருஷ்ணகிரியில் ஆறு முறையும் அதிமுக வென்றுள்ளது. பர்கூரில் அதிமுக 9 முறை வென்றிருந்தாலும், அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை 1996ஆம் ஆண்டு தேர்தலில் தோற்கடித்த தொகுதியும் இதே பர்கூர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓசூர் மற்றும் தளியை பொறுத்தவரை திமுக, அதிமுக இரண்டு கட்சிகளைவிடவும் காங்கிரஸின் கை ஓங்கியுள்ளது. ஓசூரை 7 முறையும், தளியை 3 முறையும் காங்கிரஸ் கைப்பற்றியிருக்கிறது.

1967ஆம் ஆண்டு தேர்தலிலிருந்து ஓசுரில் திமுகவும், தளியில் அதிமுகவும் ஒரு முறைகூட வெல்லவில்லை.

தர்மபுரி மாவட்டம்:

தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன.

kongu mandalam

இதில், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இத்தொகுதி சந்தித்த 2011, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலை மலர்ந்துள்ளது.

அதேபோல், பாலக்கோட்டில் 8 முறை வென்றிருக்கிறது. அரூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிமுக, திமுகவைவிட அதிகமுறை வென்ற்றிறுக்கிறது (4 முறை).

இந்தத் தொகுதியில் மார்க்சிஸ்ட்டுக்கு அடுத்ததாக அதிமுக மூன்று முறையும், திமுக இரண்டு முறையும் வெற்றியை பெற்றுள்ளன.

அதேசமயம், தர்மபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுகல் 6 முறை வெற்றிவாகை சூடியிருக்கிறது. பென்னாகரத்தில், திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், பாமக கட்சிகள் தலா இரண்டு முறை வென்றிருக்கின்றன.

சேலம் மாவட்டம்:

சேலம் மாவட்டத்தில், கங்கள்ளி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (பழங்குடி), ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி என மொத்தம் 11 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன.

இதில் கங்கள்ளி, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு ஆகிய நான்கு தொகுதிகள் 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டவை.

இந்த நான்கு தொகுதிகளும் சந்தித்த இரண்டு தேர்தல்களில் திமுக, அதிமுக, தேமுதிக கட்சிகளின் வெற்றி ஏறத்தாழ சம அளவில் இருக்கின்றன.

கங்கள்ளியில் அதிமுக ஒரு முறை, தேமுதிக ஒரு முறை, சேலம் மேற்கில் அதிமுக இரண்டு முறை, சேலம் வடக்கில் திமுக ஒரு முறை, தேமுதிக ஒரு முறை, சேலம் தெற்கில் அதிமுக இரண்டு முறை வெற்றி வாகை சூடியுள்ளன.

மற்ற தொகுதிகளைப் பொறுத்தவரை, ஆத்தூர் தனி தொகுதியில் திமுகவும் அதிமுகவும் தலா 4 முறை வென்றிருக்கின்றன. ஏற்காடு , ஓமலூர், வீரபாண்டி தொகுதிகளை அதிமுக, தலா ஏழு முறையும், மேட்டூர், எடப்பாடி தொதிகளை தலா ஆறு முறையும் கைப்பற்றியுள்ளது.

திமுகவைப் பொறுத்தவரை சஞ்ககிரியில் மட்டும் ஏழு முறை வென்று அதிமுகவை முந்தியிருக்கிறது. மேட்டூரில் ஐந்து முறை வென்று அதிமுகவை நெருங்கி வந்திருக்கிறது.

நாமக்கல் மாவட்டம்:

நாமக்கல் மாவட்டம் தற்போதைய காபந்து அரசுக்கு அமைச்சரை கொடுத்த மாவட்டமாகும். இந்த மாவட்டம் ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் என ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

குமாரபாளையமும், பரமத்தி வேலூரும் 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொகுதிகள். குமாரபாளையம் சந்தித்த 2011 மற்றும் 2016 தேர்தல்களில் அதிமுக இரண்டு முறையும், பரமத்திவேலூரில் திமுகல் அதிமுக தலா ஒரு முறையும் வென்றிருக்கின்றன.

மற்றத் தொகுதிகளில் அதிமுக அசுர பலத்துடன் இருக்கிறது. அதாவது ராசிபுரத்தில் 8, சேந்தமங்கலத்தில் 7, நாமக்கல்லில் 6, திருச்செங்கோட்டில் 7 முறை அக்கட்சி வென்றிருக்கிறது. இந்த மாவட்டத்தில் திமுக அதிகபட்சமாக ராசிபுரத்தில் 4 முறையும், நாமக்கல்லில் 4 முறையும், திருச்செங்கோட்டில் 3 முறையும் வென்றிருக்கிறது.

ஈரோடு மாவட்டம்:

அதிமுகவின் மூத்த முகங்களில் ஒருவரான செங்கோட்டையனின் சொந்த மாவட்டம் ஈரோடு. இந்த மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிப்பாளையம், பவானிசாகர் (தனி) என மொத்தம் 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன.

ஈரோடு கிழக்கும், ஈரோடு மேற்கும் 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொகுதிகள். ஈரோடு கிழக்கில் தேமுதிக, அதிமுக தலா 1 முறையும், ஈரோடு மேற்கில் அதிமுக இரண்டு முறையும் வெற்றியை ருசித்துள்ளன. நாமக்கல் மாவட்டம் போலவே ஈரோடு மாவட்டத்திலும் அதிமுகவின் பலமே அதிகம் இருக்கிறது.

அக்கட்சி மொடக்குறிச்சியில் 7, பெருந்துறையில் 8, பவானியில் 7, அந்தியூரில் 7, கோபிசெட்டிப்பாளையத்தில் 9, பவானிசாகரில் 7 முறை வென்று ஈரோடு இரட்டை இலைக்கானது என கடந்த கால வரலாறில் எழுதி வைத்திருக்கிறது. பெருந்துறையில் மட்டும் அதிமுகவுக்கு அடுத்தபடியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூன்று முறை வென்றிருக்கிறது. அதேபோல் திமுக அந்தியூரிலும், பவானிசாகரிலும் தலா நான்கு முறை பெற்ற வெற்றியே அக்கட்சி பெற்ற பெரிய வெற்றியாக இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம்:

தமிழகத்தில் ஏழாவது பெரிய நகரமான திருப்பூர் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு தொழில் நகரமாகும். திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இந்த மாவட்டத்தில், தாராபுரம் (தனி), காங்கேயம், அவினாசி (தனி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன.

kongu mandalam

இதில் திருப்பூர் வடக்கும், தெற்கு, மடத்துக்குளம் 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொகுதிகள். திருப்பூர் வடக்கு தொகுதி சந்தித்த இரண்டு தேர்தல்களில் அதிமுக இரண்டு முறையும், திருப்பூர் தெற்கு சந்தித்த இரண்டு தேர்தல்களில் அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு முறையும், மடத்துக்குளத்தில் திமுக அதிமுக தலா ஒரு முறையும் வென்றிருக்கின்றன.

மற்றபடி, இந்த மாவட்டத்திலும் அதிமுக அசுர பலத்தோடு இருக்கிறது. அக்கட்சியானது காங்கேயம், பல்லடம் தொகுதிகளில் தலா 8 முறையும், அவினாசி, உடுமலைப்பேட்டையில் தலா ஏழு முறையும் வென்றிருக்கிறது. திமுக இந்த மாவட்டத்தில் அதிகபட்சமாக உடுமலைப்பேட்டையில் மட்டும் நான்கு முறை வெற்றியை பெற்றுள்ளது.

நீலகிரி மாவட்டம்:

தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் நீலகிரி மாவட்டமும் ஒன்று. உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களுள் ஒன்றான மேற்குத்தொடர்ச்சி மலைகளின் பகுதியான நீலகிரி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் முக்கியமான சந்திப்புப் புள்ளியாகும். ”மலைகளின் அரசி” எனப்படும் உதகமண்டலம், குன்னூர் (உதகையி்ல் இருந்து 19 கி.மீ. தொலைவு) மற்றும் கோத்தகிரி (உதகையி்ல் இருந்து 31 கி.மீ) ஆகியவை நீலகிரி மாவட்டத்தின் முக்கிய நகரங்களாகும்.

இந்த மாவட்டத்தில், உதகமண்டலம், கூடலூர் (தனி), குன்னூர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன. குளிர் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் திமுகவின் உதயசூரியன் அதிக முறை உதித்திருக்கிறது. அக்கட்சி கூடலூரில் 6 முறையும், குன்னூரில் 8 முறையும் வென்றிருக்கிறது. அதேபோல், காங்கிரஸ் கட்சியும் உதகமண்டல தொகுதியில் 6 முறை வெற்றியடைந்திருக்கிறது. அதிமுகவைப் பொறுத்தவரை கூடலூரிலும், குன்னூரிலும் தலா மூன்று முறை பெற்ற வெற்றியே அக்கட்சியின் அதிகபட்ச வெற்றியாக இருக்கிறது.

கரூர் மாவட்டம்:

கரூர் மாவட்டமானது திருச்சி மாவட்டத்திலிருந்து 1996ஆம் ஆண்டு பிரிக்கபப்ட்டது. இந்த மாவட்டம், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. இம்மாவட்டத்தில் குளித்தலையில் மட்டும் திமுக, அதிமுக தலா ஐந்து முறை வென்றிருக்கின்றன. மற்ற தொகுதிகளை கடந்த காலங்களில் இரட்டை இலையே ஆக்கிரமித்துள்ளது.

அதன்படி அக்கட்சி கரூரி ஏழு முறையும், கிருஷ்ணராயபுரத்தில் ஆறு முறையும், அரவக்குறிச்சியில் ஐந்து முறையும் வென்றிருக்கிறது. குளித்தலையை தவிர்த்து திமுகவானது, அரவக்குறிச்சியிலும், கிருஷ்ணராயபுரத்திலும் தலா நான்கு முறை வென்றிருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளை தவிர்த்து காங்கிரஸ் அதிகபட்சமாக கரூரில் இரண்டு முறை வென்றிருக்கிறது.

கோவை மாவட்டம்:

இந்தியாவில், வேளாண்மைக்கு அடுத்து கோடிக்கணக்கான குடும்பங்களின் ஆதாரமாக இருப்பது ஜவுளித்துறை. இந்தியாவில், ஜவுளித்துறையின் சாதனை மையங்களாக ஏ,பி,சி என 3 நகரங்கள் அழைக்கப்படுகின்றன. ஏ- அகமதாபாத், பி- பம்பாய் சி- கோயம்புத்தூர். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூர் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாகும்.

kongu mandalam

இப்படி பல பெருமைகளைப் பெற்றிருக்கும் கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பத்து சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்டிருக்கிறது.

பத்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு ஆகிய நான்கு தொகுதிகள் 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டவை. கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு ஆகிய தொகுதிகள் சந்தித்த 2011, 2016ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவே வெற்றி பெற்றிருக்கிறது. சூலூரை தேமுதிக ஒரு முறையும், அதிமுக ஒருமுறையும் கைப்பற்றியிருக்கின்றன.

கொங்கு மண்டலத்தில் இருக்கும் மற்ற மாவட்டங்களைப் போலவே கோவை மாவட்டத்திலும் அதிமுகவின் செல்வாக்கு அபரிமிதமாக இருக்கிறது. அக்கட்சி மேட்டுபாளையம், கிணத்துக்கடவில் தலா எட்டு முறையும், பொள்ளாச்சியில் ஒன்பது முறையும் வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோல், தொண்டாமுத்தூரை ஆறு முறையும், வால்பாறையை நான்கு முறையும் அதிமுக தன் வசமாக்கியுள்ளது. திமுகவைப் பொறுத்தவரை சிங்காநல்லூரில் மட்டுமே அதிமுகவைவிட அதிக முறை வென்றிருக்கிறது (4 முறை).

கடந்த தேர்தல் நிலை:

தமிழ்நாட்டில் நடந்த கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மேற்கு மண்டலத்தின் 61 சட்டப்பேரவைத் தொகுதிகளில், திமுக 10 தொகுதிகளையும், காங்கிரஸ் இரண்டு தொகுதிகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியையும் கைப்பற்றின. மீதமிருக்கும் 48 தொகுதிகளை கைப்பற்றி கொங்கு மண்டலத்திற்குள் எங்களைத் தவிர யாருக்கும் இடமில்லை என்று மற்ற கட்சிகளுக்கு உணர்த்தியது அதிமுக.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details